Thursday, May 29, 2014

மணி பதினொன்று. இன்றும் அலுவலகத்தில் இருந்து வர தாமதமாகிவிட்டது. அறையில் நண்பர்கள் யாரும் இல்லை. நைட் ஷோ சென்றிருப்பார்கள். படத்திற்கு போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.இன்று சீக்கிரம் வந்திருந்தால் நானும் சென்றிருக்கலாம். கிளம்பும் நேரத்தில் மேனேஜர் வந்து வேலை கொடுத்துவிட்டான். இன்று இரண்டாவது முறையாக அவனுடன் தகராறு. ஒன்று இந்த ப்ராஜெக்டில் இருந்து மாற வேண்டும் இல்லையென்றால் கம்பெனியை மாற்ற் வேண்டும். அப்போது தான் நிம்மதி. இதற்கு மேலும் இவனிடம் வேலை பார்க்க முடியாது.

அவனை மட்டும் குறை சொல்லி என்ன பயன். யாருக்கு தான் என் பேரில் அக்கறை இருக்கிறது. பெற்றவர்களுக்கே அக்கறை இல்லை. அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் நான் ஏன் கல்கத்தாவை விட்டு சென்னைக்கு வரப் போகிறேன். ஜனனியை மணக்க அவர்கள் சம்மதம் சொல்லியிருந்தால் இந்நேரம் என் வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்திருக்கும். அதைத் தாங்க முடியாமல் தானே கல்கத்தாவில் இருந்து இடமாற்றம் கேட்டு இப்போது சென்னையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இரண்டு பாக்கெட் சிகரெட்டில் என் சோகங்களை எல்லாம் மறந்துவிடத் துடிக்கிறேன்.

ஜனனி பத்தாம் வகுப்பில் என் பள்ளியில் வந்து சேர்ந்தாள். அவளும் தமிழ் தான். சொந்த ஊர் திருநெல்வேலி. அவள் அப்பாவிற்கு மாற்றலாகி அந்த வருடம் தான் கல்கத்தா வந்தனர். அப்போது முதல் கல்லூரி வரை ஒன்றாகவே படித்தோம். அந்த ஏழு ஆண்டுகளில் என் செயல்கள் முழுக்க முழுக்க ஜனனியை நோக்கித் தான் இருந்தது.
நான் கிதார் வாசிக்கக் கற்றுக் கொண்டதே அவளால் தான். ஒரு நாள் பள்ளியில் இருந்து இரயிலில் வீடு திரும்பும்போது எதிர் சீட்டில் ஒருவன் கிடார் வைத்திருந்தான். ஜனனி எனக்கு கிதார் வாசிக்கத் தெரியுமா எனக் கேட்டாள். அவளுக்காகவே அடுத்த நாளே கிடார் வகுப்பில் சேர்ந்து கிடார் கற்றுக்கொண்டேன்.

அதே போல் நான் கிடார் வாசிப்பதை நிறுத்தியதற்குக் காரணமும் அவள் தான். கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கலை நிகழ்ச்சிக்காக மேடையில் வாசித்தேன். அன்று மாலை ஏதோ காரணத்துக்காக எங்களுக்குள் சண்டை வந்தது. அந்த ஆறு வருடங்களில் எங்களிடையே விழுந்த முதல் விரிசல். அன்று முடிவு செய்தேன். இனி கிடார் வாசிக்கப் போவதில்லை என. இப்படித் தான் பல நேரங்களில் காரணமில்லாத பைத்தியக்காரத் தனமான முடிவுகளை எடுக்கின்றோம்.

என் மாமா BARC-இல் வேலை செய்துகொண்டிருந்தார். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ஜனனியை மணக்க என் அப்பா எதிர்ப்பு தெரிவித்தாலும் மாமா பேசி எப்படியாவது எங்கள் திருமணத்தை நடத்தி வைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் நான் இறுதி வருடம் படித்தபோது ‘ஹார்ட் அட்டாக்’கில் மாமா இறந்துபோனார். அதுதான் வாழ்க்கையில் நான் பட்ட முதல் அடி. அவர் இருந்திருந்தால் நான் ஜனனியைப் பிரிந்திருக்கத் தேவையில்லை.

அடுத்த ஆறு மாதத்தில் பாட்டியும் இறந்துபோனாள். பாட்டி இறந்த இரண்டு மாதங்களில் அப்பாவிடம் எங்கள் காதலைப் பற்றி சொன்னபோது அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜாதி, மொழி எல்லாம் ஒன்று தான். ஆனாலும் அவர் சம்மதிக்க மறுத்துவிட்டார். பெற்ற மகனின் வாழ்க்கையில் அக்கறை இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டார்.

எல்லாம் சுயநலவாதிகள் தானே. அவருக்கு விருப்பமான படிப்பு, அவருக்கு விருப்பமான வேலை, இப்போது அவருக்கு விருப்பமான மருமகள் வேண்டும். எல்லாம் அவர் விருப்பம் போல் அமைய வேண்டும். ஜனனியின் வீட்டிலும் எங்கள் காதலை ஒத்துக்கொள்ளவில்லை. என்னை விட அவள் அதை எளிதாக்த் தாங்கிக் கொண்டாள்.

இதுவரையில் என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணங்களும் சோகமான தருணங்களும் ஜனனியால் வந்தவையே.

ஒரு முறை பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது மழை வலுக்க நான் மூடியிருந்த ஒரு கடையின் வாசலில் ஒதுங்கினேன். சிறிது நேரத்தில் ஜனனி குடையுடன் வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் நின்று தன் குடைக்குள் வருமாறு அழைத்தாள். நான் மறுக்க “என்னுடன் குடையில் நனையாமல் வா. இல்லையென்றால் மழை நின்றபின் இருவரும் போவோம்” என அவளும் அந்த கூரையின் கீழ் வந்து நின்றுவிட்டாள். அவளுடன் செல்ல உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கத்தில் மழை நிற்கும் வரை அங்கேயே நின்று பேசிவிட்டு கிளம்பினோம். இது போல் எத்தனை நினைவுகள்.

கல்லூரி படிப்பு முடிந்து நான் வேலைக்குச் சேர்ந்த அதே தினத்தில் ஜனனிக்கு திருமணம். என்னையும் அழைத்தாள். திருமணத்திற்கு ஒரு வாரம் முன் போன் செய்து இரண்டு மணி நேரம் அழுதாள். திருமணத்திற்கு நான் செல்லவில்லை. அந்த அளவு என் மனதில் வலுவில்லை.

காலம் தான் எவ்வளவு வேகமாக செல்கிறது. அவளுக்குத் திருமணம் நடந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது லக்னோவில் இருக்கிறாள். அவள் திருமணத்திற்குப் பின் அவளிடம் பேசவேயில்லை. ஆறு மாதங்களுக்கு முன் அவளாக எப்படியோ என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அழைத்தாள். அப்போதும் என்னால் அவளிடம் பேச முடியவில்லை.அவள் நலனை விசாரித்துவிட்டு இனி எனக்கு போன் செய்யவேண்டாம் எனக் கூறிவிட்டு வைத்துவிட்டேன். அன்று இரவு அவள் திருமணத்தின் போது அழுததை விட அதிகமாக அழுதேன்.

அவள் மகனுக்கு இரண்டு வயதாகிவிட்டதாம். அவள் தோழி கீதா சொன்னாள். ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வரவேண்டுமென நினைக்கத் தான் முடிகிறதே தவிர கிளம்புவதற்குத் திராணியில்லை. அவள் மகனுக்கு ‘கார்த்திக்’ எனப் பெயர் வைத்திருக்கிறாளாம். சினிமாவில் மட்டும் தான் முன்னாள் காதலனின் பெயரை வைப்பார்கள் போல.

என் அப்பா அன்றே என் காதலுக்குச் சம்மதம் சொல்லியிருந்தால் இப்படி நடுஇரவில் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்க மாட்டேன். நம் விருப்பத்தை என்றைக்கு மதித்திருக்கிறார்கள். அவர் மேல் எவ்வளவு வெறுப்பிருந்தாலும் அவரை மீறவும் மனம் வரவில்லை. கடைசி வரை நம் மேல் அக்கறை கொண்டு நமக்கு நல்லது செய்பவர்கள் யாருமில்லை.

இப்போது வேறொரு பெண்ணைக் காதலித்தால் ஒத்துக்கொள்ளவா போகிறார். அதற்கும் அவரிடம் சண்டை போடத்தான் வேண்டும். நானும் ஜனனியை மறக்க வேண்டும். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே தோன்றுகிறது. முதலில் அதை மாற்ற வேண்டும்.

மணி ஒன்றாகிவிட்டது. இன்னும் நண்பர்கள் படம் முடித்து வீடு திரும்பவில்லை. விஜய் பைக்கிற்கு ஆர்.சி புக் இல்லை.

நாளை பத்து மணிக்கு மீட்டிங் இருக்கிறது. அதற்கு முன் மேனேஜரிடம் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அளிக்க வேண்டும். இந்த ப்ராஜெக்டை திட்டமிட்டபடி இந்த மாதத்துக்குள் முடித்துவிட்டால் நல்லது. அவனிடம் நல்ல பெயர் கிடைக்கும், ரேட்டிங்கில் உதவும்.
தூக்க மாத்திரை எங்கே வைத்தேன்?

No comments :

Post a Comment